வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.
அரியலூர்,
சிறப்பு பார்வையாளர் ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1-1-2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வருகிற 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. 2-வது நாளாக நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.
இதில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் நடந்த முகாம்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறையின் அரசு செயலாளருமான மகேஸ்வரி, கலெக்டர் ரமணசரஸ்வதியுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
27, 28-ந் தேதிகளில்...
இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் வருகிற 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இதேபோல் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பார்வையாளர் மகேஸ்வரி தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் முகாமில் 6,575 மனுக்கள் பெறப்பட்டன
நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,835 மனுக்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,755 மனுக்களும் என மொத்தம் 3,590 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,460 மனுக்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,525 மனுக்களும் என மொத்தம் 2,985 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்
வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து விதமான சந்தேகங்களுக்கும், குறைபாடுகளுக்கும் வாக்காளர் உதவி மைய 1950 கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 044-25674302 என்ற அலுவலக தொலைபேசி எண்ணையும், 9445252243 என்ற செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் er22maptk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.