குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் குடியிருப்புவாசிகள் சாலை மறியல் சிதம்பரம் வண்டிகேட்டில் பரபரப்பு

சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் குடியிருப்புவாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-14 17:44 GMT
சிதம்பரம், 

மின் மோட்டாா் பழுது

சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியர்களின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மின்மோட்டார் மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து கட்டிடத்தின் மேல்பகுதியில் உள்ள தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் திடீரென பழுதானதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் பழுதான மின்மோட்டாரை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போலீசார் பேச்சுவார்த்தை

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்கள் நேற்று காலை காலி குடங்களுடன் சிதம்பரம்-கடலூர் சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பழுதான மின்மோட்டாரை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற குடியிருப்புவாசிகள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்