கும்பகோணத்தில் விபத்துகளில் 2 பேர் பலி எதிரொலி: சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணி விடிய, விடிய நடந்தது

கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதன் எதிரொலியாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணி விடிய, விடிய நடந்தது.

Update: 2021-11-14 17:36 GMT
கும்பகோணம்:-

கும்பகோணத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். இதன் எதிரொலியாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை அப்புறப்படுத்தும் பணி விடிய, விடிய நடந்தது.

மாடுகளால் விபத்து

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் கடந்த ஓராண்டாக சாலையில் திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, பல்வேறு விபத்துகள் நடந்தன. இந்த நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 
ஆனாலும் மாடுகள் அப்புறப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் (வயது32), சாலையில் படுத்து இருந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் பிரபாகரன் என்கிற கூலி தொழிலாளி மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க பிரேக் போட்ட போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். 

விடிய, விடிய...

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு 2 பேர் பலியானதன் எதிரொலியாக மாடுகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில் கும்பகோணம் நகராட்சி ஆணையர் நரேந்திரன், நகர் நல அலுவலர் பிரேமா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கி விடிய விடிய மாடுகளை பிடிக்க தொடங்கினர். 
அப்போது கும்பகோணம் பாலக்கரை, மேம்பாலம், பெருமாண்டி, தாராசுரம், உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகிய இடங்களில் சாலையில் சுற்றித்திரிந்த 31 மாடுகளை பிடித்து வாகனங்கள் மூலமாக கோ சாலைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் கூறியதாவது:-

அபராதம்

சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோ சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்தும் ஆலோசிப்போம். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்