பெண் டாக்டர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பெண் டாக்டர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
உடுமலை,
உடுமலையில் ஓடைக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் திருமணமான 7 மாதத்தில் பெண் டாக்டர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள். உறவினரின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உறவினர் வீட்டு திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஊத்தங்கரையை சேர்ந்தவர் பூபாலன். இவர் ஓசூர் அருகே சூலகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காவ்யா (வயது 25). இவர் ஊத்தங்கரை அருகே உள்ள தீர்த்தமலையில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.
காவ்யாவின் நெருங்கிய உறவினர் வீட்டுத்திருமணம் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 11-ந் தேதி நடந்தது. இந்த திருமணத்திற்காக பூபாலன், காவ்யா மற்றும் காவ்யாவின் தந்தை ஓய்வு பெற்ற தாசில்தார் சக்திவேல் (60), காவ்யாவின் தாயார் ஆசிரியை விஜயராணி (50), காவ்யாவின் தாத்தா பொன்வேல் (85), காவ்யாவின் பாட்டி பாப்பு (80) ஆகியோர் உடுமலைக்கு வந்திருந்தனர். திருமணம் முடிந்த பிறகு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர்கள் உடுமலையில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் டாக்டர் பூபாலன் நேற்று முன்தினம் ஊத்தங்கரைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அவரது மனைவி காவ்யா உள்ளிட்டவர்கள் உடுமலையில் தங்கியிருந்தனர்.
ஓடைக்குள் கார் கவிழ்ந்தது
அவர்கள் அனைவரும் உறவினர் வீட்டு திருமணத்தின் தொடர் நிகழ்ச்சியாக நேற்று நடந்த விருந்தில் கலந்துகொண்டுவிட்டு பிற்பகலில் காரில் ஊத்தங்கரைக்கு புறப்பட்டனர். காரை டாக்டர் காவ்யா ஓட்டினார். காரில் காவ்யாவின் தந்தை சக்திவேல், தாயார் விஜயராணி (50), காவ்யாவின் தாத்தா பொன்வேல், காவ்யாவின் பாட்டி பாப்பு ஆகியோர் இருந்தனர். கார் உடுமலை சேரன்நகரை கடந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது அங்குபாலம் உள்ளதை அடையாளம் காட்டும் வகையில் பாலத்திற்கு முன்பகுதியில் இடதுபுறம் வைக்கப்பட்டுள்ள அடையாள குறியின் இரும்பு பலகையில் கார் திடீரென்று மோதி அங்குள்ள ஓடைக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் காருக்குள் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்து அபாயக்குரல் எழுப்பினர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 பேர் பலி
அங்கு டாக்டர் காவ்யா, அவருடைய தாத்தா பொன்வேல் ஆகியோரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சக்திவேல், பாப்பு மற்றும் விஜயராணி ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சக்திவேல், பாப்பு ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். விஜயராணிக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பியபோது கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.