ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை 12 பேர் கைது
புதுவையில் நேற்று அதிகாலையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வில்லியனூர் பகுதியில் 12 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி, நவ.
புதுவையில் நேற்று அதிகாலையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வில்லியனூர் பகுதியில் 12 பேரை கைது செய்தனர்.
சட்டம்- ஒழுங்கு பாதிப்பு
புதுச்சேரியில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிறையில் இருக்கும் ரவுடிகள் வெளியில் உள்ள தங்கள் கூட்டாளிகள் மூலமாக கொலை, கொள்ளை, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
ரவுடிகள் தங்களின் எதிரிகளை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நமச்சிவாயம், ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.
‘ஆபரேசன் திரிசூல்’
அதன்பேரில் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா உத்தரவின்பேரில் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் தலைமையில் போலீசார் புதுச்சேரியில் வெடிகுண்டு கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் திரிசூல்’ என்ற பெயரில் ரவுடிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த வாரம் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 14 பேரை கைது செய்தனர்.
அதிகாலையில் சோதனை
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மேற்பார்வையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மோப்ப நாய் உதவியுடன் 3 குழுக்களாக பிரிந்து லாஸ்பேட்டை, சாமிபிள்ளை தோட்டம், கருவடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்திய போலீசார், வீட்டில் இருந்தவர்களிடம் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நடந்தது.
12 பேர் கைது
இதேபோல் போலீஸ் சூப்பிரண்டுகள் ரங்கநாதன், விஷ்ணு, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று அதிகாலை கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு, ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.
இந்தசோதனையில் கரிக்கலாம்பாக்கத்தில் 7 ரவுடிகளும், கோர்க்காட்டில் 5 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏதாவது சதிதிட்டம் தீட்டியுள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடிகள் கலக்கம்
போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் புதுவையில் உள்ள ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.