கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

Update: 2021-11-14 16:33 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3 வருட முன்அனுபவம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐ.டி.ஐ.யில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு இல்லை. தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

செய்முறை தேர்வு

ஆகஸ்டு 2019-ம் ஆண்டில் சேர்க்கை செய்யப்பெற்ற பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பித்து தேசிய தொழிற்சான்றிதழ் பெறலாம். தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களுக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி முதல்நிலை கருத்தியல் தேர்வும், 15-ந் தேதி செய்முறை தேர்வு கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செயல்முறை தேர்வில் கலந்து கொள்ள முடியும்.இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 2022-ல் நடைபெறவுள்ள அகில இந்திய முதல் வருட தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

கடைசிநாள்

தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு எஸ்.சி.வி.டி. மூலம் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தேர்வு குறித்த விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தியதற்கான செலான், கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை இணைத்து வருகிற 22-ந் தேதிக்குள் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேர்வு மைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்