நகை அடகு கடையில் ரூ.12 லட்சம் மோசடி
கம்பத்தில் நகை அடகு கடையில் போலி ரசீது தயாரித்து ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் கவுதம் (வயது 28). இவர், கம்பம் நெல்லுக்குத்தி புளியமர தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கார்த்திகா (25) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் மற்றொரு நகை அடகு கடையை கவுதம் தொடங்கினார். இதனால் 2 நகை அடகு கடைகளுக்கும் கார்த்திகா சென்று வந்தார்.
இந்தநிலையில் கம்பத்தில் உள்ள நகை அடகு கடையில் கணக்கு விவரங்களை கவுதம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது நகைகளுக்கு போலியாக ரசீது தயார் செய்து, கூடுதல் பணம் கொடுத்து இருப்பதும், அதில் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் கோர்ட்டில் கவுதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய நகை அடகு கடையில் பணிபுரிந்த கார்த்திகா போலி ரசீது தயாரித்து, அதன் மூலம் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக கேட்டபோது அவர், அவரது கணவர் ஈஸ்வரன் மற்றும் உறவினர்கள் ஜோதி, மதன், சுமதி, மற்றொரு கார்த்திகா ஆகியோர் சேர்ந்து என்னை மிரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, கம்பம் தெற்கு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கார்த்திகா, கணவர் ஈஸ்வரன் உள்பட 6 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.