விழுப்புரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருநாள் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
இதற்காக விழுப்புரம் அருகே சாலைஅகரம், அய்யங்கோவில்பட்டு, கோலியனூர், அய்யூர்அகரம் உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக அகல்விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயார் செய்யப்படும் அகல்விளக்குகள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி
கார்த்திகை தீபத்திருநாளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தற்போது விழுப்புரம் பகுதியில் அகல்விளக்குகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி சாலைஅகரத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். வருடத்தில் கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை வைத்துதான் எங்களின் வாழ்வாதாரமே உள்ளது. இப்படியிருக்க கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் சமயத்தில் பெய்த பலத்த மழையினால் அகல்விளக்கு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டு எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
வருணபகவான் கருணை காட்டுவாரா?
இந்த ஆண்டும் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையினால் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக மழை ஓய்ந்து சற்று சூரியன் தலைகாட்ட தொடங்கியுள்ளதால் தற்போது அகல்விளக்குகளை தயாரிக்கும் பணியை தொடங்கி அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். முன்பெல்லாம் வெளியூர்களில் இருந்து முன்கூட்டியே மொத்தமாக ஆர்டர் வாங்கி அகல்விளக்குகள் தயாரிப்போம். தற்போது பெய்த தொடர் மழையினால் வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர் எதுவும் வரவில்லை.
இதனால் விழுப்புரம் மாவட்டத்திற்குள் மட்டும் விற்பனை செய்வதற்காக அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். சிறிய அளவிலான அகல்விளக்குகள் ஒரு ரூபாயில் இருந்து பெரிய அளவிலான அகல்விளக்குகள் ரூ.200 வரை விற்பனை செய்ய உள்ளோம். இந்நிலையில் ஓரிரு நாளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு மழை பெய்யும்பட்சத்தில் நாங்கள் தயாரித்து உலர வைத்துள்ள அகல்விளக்குகளை சூளை போட்டு வேக வைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் இந்த ஆண்டு அகல்விளக்கு விற்பனை பாதிக்கப்பட்டு எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும், அதற்கு இடமளிக்காமல் வருண பகவான் வழிவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
அரசு ஊக்குவிக்க வேண்டும்
மேலும் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதால் இந்த தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும். அதேநேரத்தில் மழை சமயங்களில் எங்கள் தொழில் பாதிக்க வாய்ப்புள்ளதால் மழைக்கால நிவாரணமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.