ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி சாவு
போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி இறந்தார்.;
போளூர்
போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூர் களியம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55), விவசாயி.
இவர் இன்று காலை அரும்பலூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் செல்ல புறப்பட்டார். வழியில் ஒடநகரம் ஓடைகால்வாயை கடந்து செல்ல வேண்டும்.
ஆனால், மழையால் ஒடநகரம் ஓடைகால்வாயில் அதிகளவில் மழைவெள்ளம் ஓடுகிறது. முனியப்பன் அரும்பலூர் செல்ல ஒடைகால்வாயில் இறங்கி தண்ணீரில் நீந்தி கடக்க முயன்றார். அப்போது திடீரென ஓடைகால்வாய் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து விட்டு உடனே போளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் ெதரிவித்தனர்.
நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வீரர்கள் தேசிங்கு, சக்தி தாஸ் மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மதியம் 2 மணி நேர தேடலுக்கு பின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த முனியப்பனை பிணமாக மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.