காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த இலக்கு
8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் செலுத்தப்படுவது மட்டுமில்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் கோவேக்சின் தடுப்பூசியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முதல் தவணை தடுப்பூசியில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு இலக்கை எட்டியுள்ளது.
முதல் தவணை 7 லட்சத்து 2 ஆயிரத்து 310 (97 சதவீதம்)
2-வது தவணை 2 லட்சத்து 77 ஆயிரத்து 156 (38 சதவீதம்), கோவேக்சின் 2-வது தவணை கால தடுப்பூசி இடைவெளி- 34 நாட்கள், கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி- 84 நாட்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் 34 நாட்கள் மற்றும் 84 நாட்கள் கடந்த பயனாளிகளை நேரடியாக தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதேபோல் அவர் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திகொள்ள விழிப்புணர்வு மாவட்டம் மற்றும் வட்டார அளவில் ஏற்படுத்தி வருகிறோம்.
34 நாட்கள் மற்றும் 84 நாட்கள் முடிந்த கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி இதுவரை செலுத்தாத பயனாளிகளாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 103 பேர் மாவட்டத்தில் உள்ளனர். மேலும் இன்று நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் இந்த மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகபெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும். எனவே இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு 2-வது தவணை நிலுவையில் உள்ள பயனாளிகளும், முதல் தவனையில் உள்ள பயனாளிகளும் இந்த முகாம்களை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.