புளியந்தோப்பு பகுதியில் 6 நாட்களாக மின்சாரம் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
புளியந்தோப்பு பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், 6 நாட்களாக மின்சாரம் இல்லாததை கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திரு.வி.க. நகர்,
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை ஓய்ந்து 2 நாட்கள் ஆன பிறகும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. புளியந்தோப்பு, ஓட்டேரி பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலை மற்றும் தெருக்களில் ஓடுகிறது.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கடந்த 6-ந்தேதி அந்த பகுதி பொதுமக்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.
இந்தநிலையில் தொடர்ந்து 6 நாட்களாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைநீருடன் கலந்து நிற்கும் கழிவுநீரும் இன்னும் வெளியேற்றப்படாமல் உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும். உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாலை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த புளியந்தோப்பு போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.