ஆறு, குளங்களை தூர்வாராததால் அதிக வெள்ள பாதிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆறு, குளங்கள் தூர்வாராமல் இருந்ததே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2021-11-14 03:37 IST
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆறு, குளங்கள் தூர்வாராமல் இருந்ததே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் மனோதங்கராஜ் ஆய்வு
குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். குறிப்பாக நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதி, தேரேகால்புதூர், புரவசேரி, முட்டைக்காடு, வைக்கல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளை அமைச்சர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வெள்ளமடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தோவாளை பகுதியில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அரவிந்த் உடனிருந்தார்.
தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முகாம்களில் தங்க வைப்பு
குமரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆறு, குளங்கள் தூர்வாராமல் இருந்ததே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம்.
அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அணைகள் பாதுகாப்பாக உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்தார். பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் குமரி மாவட்டத்திற்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் வெள்ள பாதித்த பகுதிகளை மாவட்ட கண்காணிப்பாளர் ஜோதி நிர்மலா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்