கடைக்கோடி கிராமத்தில் தடுப்பூசி வினியோகித்த ‘டிரோன்’
பெங்களூரு அருகே கடைக்கோடி கிராமத்துக்கு டிரோன் மூலம் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது.
பெங்களூரு:
கொரோனா தடுப்பூசி
நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சென்றடைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்து வருகிறது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் தடுப்பூசிகள் மாவட்ட ஆஸ்பத்திரியில் இருந்து மற்ற ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா தடுப்பூசிகள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல், வாகன பழுது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா தடுப்பூசி சரியான நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே டிரோன் மூலம் கொரோனா தடுப்பூசி கடைக்கோடி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
டிரோன் மூலம் வினியோகம்
பெங்களூரு மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஹரக்கட்டே என்ற கிராமத்துக்கு சந்தாப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பூசி குப்பிகளை சிரிஞ்சுகளுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) எடுத்துச் சென்று நேற்று காலை 9.53 மணிக்கு ஒப்படைத்தது.
14 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஹரக்கட்டே கிராமத்துக்கு 10 நிமிடத்தில் இந்த டிரோன் சென்றடைந்தது. இந்த டிரோன் 300 மீட்டர் உயரத்தில் 10 மீட்டர் வேகத்தில் பறந்தது. அதன்பின்னர் அந்த டிரோன், சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரும்பியது. சாலை வழியாக சென்றால் 40 நிமிடத்தில் சென்று அடையக்கூடிய தொலைவை இந்த டிரோன் 10 நிமிடத்தில் சென்று அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர்கள் மகிழ்ச்சி
டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி டாக்டர் மணிஷா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டிரோன் சேவையை தொலை தூரத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் தேசிய விண்வெளி ஆய்வகத்தின் வாகன பிரிவு தலைவர் சத்யநாராயண மூர்த்தி கூறும்போது, தொலை தூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்க ஆக்டாகாப்டர் டிரோனின் சேவை தேவை என்றும், இந்த டிரோனை இயக்குவது எளிது என்றும் கூறினார்.
இந்த வினியோகத்தை செய்துள்ள டிரோன், இதற்காகவே வடிவமைக்கப்பட்டு தேசிய விண்வெளி ஆய்வுக்கூடத்தால் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.