தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோவிந்தநாட்டுசேரி புத்தூர் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளை விஷவண்டுகள் கடித்து வந்தன. இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து புத்தூர் அம்மன் கோவில் தெருவில் இருந்த விஷவண்டுகள் அழிக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர். நகரில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், தற்போது பெய்த தொடர் மழையால் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி குளத்தில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ராதா நகரில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பொதுமக்கள் சேறும், சகதியுமான சாலையில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் குப்பைத்தொட்டிகள் இல்லை. இதனால் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி மற்றும் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?