எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை திடீர் சந்திப்பு
பிட்காயின் முறைகேடு விவகாரத்தால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை பசவராஜ் பொாம்மை திடீரென சந்தித்து பேசினார்.;
பெங்களூரு:
பிட்காயின் முறைகேடு
கர்நாடகத்தில் பிட்காயின் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதில் சில மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகிறார்கள். இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிட்காயின் முறைகேடு விவகாரம் குறித்து அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறினார்.
அதற்கு பிரதமர், அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியதாக பசவராஜ் பொம்மை கூறினார். அதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவர்கள் இடைத்தேர்தல் தோல்வி, பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் அரசு மீது எழும் விமர்சனங்களால் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என கூறி அதிருப்தி தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
கட்சிக்கு ஏற்படும் அவப்பெயர்
2 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பெங்களூரு திரும்பினார். தனது டெல்லி பயணம் வெற்றிகரமாக அமைந்தாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பிட்காயின் விவகாரத்தில் பசவராஜ் பொம்மை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை பசவராஜ் பொம்மை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தன. அப்போது காங்கிரசார் எழுப்பி வரும் பிட்காயின் முறைகேடு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீலையும் அவர் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பிட்காயின் முறைகேடு விவகாரத்தை எப்படி கையாள்வது, இதனால் கட்சிக்கு ஏற்படும் அவப்பெயரை தடுக்க என்ன செய்வது என்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகத்தில் நாளுக்கு நாள் பிட்காயின் முறைகேடு விவகாரம் தீவிரம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.