நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் 10 பேருக்கு பொருத்த முயற்சி

நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்களை 10 பேருக்கு பொருத்த முயற்சி செய்வதாக நாராயண நேத்ராலயா மருத்துவமனை டாக்டர் கூறியுள்ளார்.

Update: 2021-11-13 20:26 GMT
பெங்களூரு:

10 பேருக்கு பொருத்த முயற்சி

  நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அன்றைய தினமே அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டன. பெங்களூருவில் உள்ள நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனை டாக்டர் புஜங்கஷெட்டி குழுவினர் வந்து கண்களை எடுத்து சென்றனர். அந்த கண்கள் 2 பேருக்கு பொருத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் 4 பேருக்கு கண்களை பொருத்தியதாக டாக்டர் கூறினார்.

  இளம் வயதில் இறந்ததால் நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் மிக ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது கண்களின் பாகங்களை 10 பேருக்கு பொருத்த முயற்சி செய்வதாக நாராயணா நேத்ராலயா மருத்துவமனை கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனை டாக்டர் யதீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேவை உள்ளவர்கள்

  நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் இதுவரை 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதன் பாகங்கள் இன்னும் எங்களிடம் உள்ளன. அவற்றை கொண்டு மொத்தம் 10 பேருக்கு பொருத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இன்னும் எத்தனை பேருக்கு பொருத்த முடியும் என்பதை எங்களால் சரியாக கூற முடியாது. கண்களின் வெள்ளை மண்டலத்தில் ‘‘ஸ்டெம் செல்களை’’ சேகரித்து வைத்துள்ளோம். அதை பயன்படுத்தி கண் பார்வையற்றவர்களுக்கு பொருத்த முடிவு செய்துள்ளோம்.

  இது நாட்டிலேயே முதல் முறையாக நடைபெறும் முயற்சி ஆகும். கண் தேவை உள்ளவர்களை டாக்டர் ராஜ்குமார் கண் வங்கி மூலம் தேடி வருகிறோம். புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பிறகு கண்களை தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 6 ஆயிரம் பேர் கண்களை தானம் செய்வதாக தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
  இவ்வாறு யதீஷ் கூறினார்.

மேலும் செய்திகள்