விபத்தில் இறந்த வாலிபர் உடலை சாலையில் எரியூட்டி போராட்டம்

விபத்தில் இறந்த வாலிபர் உடலை சாலையில் எரியூட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2021-11-13 19:58 GMT
செந்துறை:

பாலம் உடைந்து சேதம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி காலனி தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 30). இவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றனர்.ஆனால் கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் பெய்த தொடர் கனமழையால் நக்கம்பாடி காலனி தெருவினர் பயன்படுத்தும் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் பாலம் உடைந்து சேதமடைந்திருந்தது. இதனால் இரண்டு பக்கமும் மண் அரிப்பு ஏற்பட்டு, சுடுகாட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சாலையில் வைத்து எரியூட்டினர்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சரவணனின் உடலை ஊர்வலமாக கொண்டு வந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் கட்டைகளை அடுக்கி, அதில் உடலை வைத்து எரியூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட அந்த பாலம் சேதமடைந்ததை கண்டித்தும், உடனடியாக தரமான புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்