தொழிலாளியை தாக்கி கடத்தல்

தொழிலாளியை தாக்கி கடத்திச்சென்றனர்.

Update: 2021-11-13 19:58 GMT
ஜெயங்கொண்டம்:

தொழிலாளி மீது தாக்குதல்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் எம்ஜிஆர்(வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆயுதக்களம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தியிடம் விவசாய கூலி வேலை செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெற்றுக்கொண்டு, வயலில் உள்ள கொட்டகையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்ததாக தெரிகிறது. ராமமூர்த்திக்கும், அவரது வயலுக்கு அருகே உள்ள வயலை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வயலில் எம்ஜிஆர் வேலை செய்தபோது, ராமமூர்த்தியின் வயலுக்கு அருகில் உள்ள வயலின் உரிமையாளர் தர்மதுரையின் மகன்கள் ஆசைத்தம்பி, வீரசேகர், உறவினர்கள் அறிவழகன், பாலமுருகன், விக்னேஷ் ஆகியோர் அங்கு வந்து, எம்ஜிஆர் குடியிருந்த கொட்டகையை அடித்து சேதப்படுத்தியதோடு, எம்ஜிஆரை கத்தி, அரிவாள், இரும்பு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடத்தல்
இதில் பலத்த காயமடைந்து மயங்கி கிடந்த எம்ஜிஆரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உட்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கு வந்த ஆசைத்தம்பி மற்றும் அவரது உறவினர்கள் எம்ஜிஆரை கடத்திச்சென்று, கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்ததாகவும், தாக்கப்பட்டதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சில நாட்களாக தனது கணவரை காணவில்லை என்று கடந்த 8-ந் தேதி எம்ஜிஆரின் மனைவி கண்ணகி, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தனியார் மருத்துவமனையில் இருந்து எம்ஜிஆரை அழைத்து வந்தனர்.
போலீஸ் நிலையத்தில் திரண்டனர்
இதையடுத்து அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தான் தாக்கப்பட்டது குறித்து எம்ஜிஆர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழக மாநிலத் தலைவர் உத்தமக்குமார் மற்றும் பொதுமக்கள் நேற்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், எம்ஜிஆரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
5 பேருக்கு வலைவீச்சு
மேலும் இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பிரச்சினையை தமிழகம் தழுவிய பிரச்சினையாக கருதி மாபெரும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக எச்சரித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள ஆசைத்தம்பி, வீரசேகர், அறிவழகன், பாலமுருகன், விக்னேஷ் ஆகிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்