கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.

Update: 2021-11-13 19:51 GMT
பெரம்பலூர்:

குருப்பெயர்ச்சி
நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று மாலை விநாயகர் பூஜை, அனுக்கை, கும்பபூஜை, திரவியஹோமம் உள்ளிட்டவை செய்து தீபாராதனையும், அதைத்தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகமும், கலசதீர்த்த அபிஷேகமும் நடந்தது. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை பயபக்தியுடன் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மபரிபாலன சங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பெரம்பலூரில் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி பூஜைகள் நடந்தன. துறைமங்கலம் சொக்கநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் வாஸ்து சாந்தி, புண்ணியாக வாஜனம், கோ பூஜை, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள், மகா அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
வாலிகண்டபுரத்தில் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. மேலும் வெங்கனூர் விருத்தாசலேஸ்வரர், குன்னம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், திருவாலந்துறை சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கும், குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
மங்களமேடு, பாடாலூர்
மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரர் (அபராத ரட்சகர்) கோவிலில் குருபகவானுக்கு 18 வகையான அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அகிலா, கோவில் குருக்கள் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
செட்டிகுளத்தில் உள்ள குபேர பரிகார தலமான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ஜெயசுதா மற்றும் செட்டிகுளம், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்