சேலம் கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா
சேலம் கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா
சேலம், நவ.14-
சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சி
குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நேற்று மாலை நடந்தது.
அதாவது, குரு பகவான் நேற்று சரியாக மாலை 6.21 மணிக்கு ரிஷப லக்னத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன், முருகன், அம்மன் கோவில்களில் உள்ள குருபகவானுக்கு நேற்று குருப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
தட்சிணாமூர்த்தி கோவில்
சேலம் சீலநாயக்கன்பட்டியில் குரு பகவானுக்கு என்று தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தனிக்கோவில் உள்ளது. குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை முதல் மாலை வரையிலும் பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து குருபகவானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து மாலை 6.21 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சுகவனேசுவரர் கோவில்
இதேபோல், சேலம் சுகவனேசுவரர் கோவில், 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், பெரமனூர் கந்தசாமி ஆறுமுகன் கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன், முருகன், அம்மன் கோவில்களில் நேற்று குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
சேலம் அன்னதானப்பட்டியை அடுத்து, தாதகாப்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சியையொட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி, வெங்கடேச பெருமாள் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து குருப்பெயர்ச்சி பரிகார யாக பூஜைகள் நடைபெற்றன.
கரபுரநாதர் கோவில்
சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி குரு பகவானுக்கும், நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குருப்பெயர்ச்சி நிகழ்ச்சியில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகார பூஜை செய்து கொண்டனர்.
தலைவாசல் அருகே வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர்கோவில், தலைவாசல் கைலாசநாதர் கோவில், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில், தேவியாக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், பெரியேரி தான்தோன்றீஸ்வரர் கோவில், சிறுவாச்சூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் என அனைத்து சிவாலயங்களில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நெய்தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.