மாணவர்கள் தினசரி நாளிதழ்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
அரசு மாணவர் விடுதிகளில் தினசரி நாளிதழ்களை படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் கூறினார்.;
விருதுநகர்,
அரசு மாணவர் விடுதிகளில் தினசரி நாளிதழ்களை படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் கூறினார்.
மாணவர் விடுதிகள்
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 32 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகள் மற்றும் 12 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள், 3 சீர்மரபினர் விடுதிகள் ஆக மொத்தம் 47 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகள் உள்ளன. தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினருக்கு சமூக பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்து துறைகளிலும் சமுதாயத்தில் இதர பிரிவினருக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்அடிப்படையில் கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம், விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச சைக்கிள், வழிகாட்டி பதிவேடு, சீருடை, பாய், போர்வை மற்றும் மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1100-ம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் முத்துராமலிங்கபுரம் அரசு பள்ளி மாணவியர் விடுதி, அருப்புக்கோட்டை அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை அரசு பள்ளி மாணவர் விடுதி 5 விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாணவர்களுக்கு வாரம் இருமுறை முருங்கைக்கீரையை உணவில் சேர்க்க வேண்டும். மாணவ- மாணவிகள் தினசரி நாளிதழ்கள் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தங்களது தெளிவான குறிக்கோளையும் வகுத்துக்கொண்டு அதன்படி பயிலவும் அறிவுரை வழங்கினார். விடுதி காப்பாளர் மாணவ- மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவு படுத்தவும், பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவை வளர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
அரசின் திட்டம்
தொடர்ந்து விடுதி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகள் அரசு வழங்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பால்துரை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தாசில்தார் செந்தில்வேல் மற்றும் விடுதி காப்பாளர்கள் உடனிருந்தனர்.