8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கரூரில் 618 இடங்களில் இன்று நடக்கிறது
8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கரூரில் 618 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
கரூர்,
தடுப்பூசி சிறப்பு முகாம்
கரூர் மாவட்டத்தில் 8-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்டம் முழுவதும் 618 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
18 வயது பூர்த்தியடைந்துள்ளவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களும் இந்த முகாமினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தொற்று இல்லாத மாவட்டம்
தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மக்களின் நலனை காப்பதற்காக சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை என அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முழுவீச்சில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்றுகூட தடுப்பூசி செலுத்திவருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது, கொரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை நம்மால் மாற்ற இயலும். எனவே, தகுதியுடைய அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்தி தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.