வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்து மாற்றம்
சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்து மாற்றம்
வேலூர்
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதில், பலர் உயிரிழந்தனர்.
பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளின் பேரில் அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் 90 நிறைவடைந்து விட்டன.
தேசிய நெடுஞ்சாலையின் அணுகுசாலையில் (சர்வீஸ்) இருந்து சுரங்கப்பாதையில் பொதுமக்கள் இறங்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது.
முதற்கட்டமாக கோர்ட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலக சாலை குறுக்கிடும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கி சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சத்துவாச்சாரிக்கு செல்லும் அணுகுசாலையில் கெங்கையம்மன் கோவில் அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கின.
இதையொட்டி அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கான்கிரீட் கற்கள் கொண்ட தடுப்புகள் வைக்கப்பட்டன.
இதன் காரணமாக வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து சத்துவாச்சாரிக்கு அணுகுசாலையில் வரும் கனரக வாகனங்கள் கலெக்டர் அலுவலக மேம்பாலம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விடப்படுகின்றன. இந்த நடைமுறை இன்னும் சில நாட்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.