தொடர் மழை காரணமாக வத்தல்மலை கொண்டை ஊசி வளைவில் 10 இடங்களில் மண் சரிவு மரங்கள் சாய்ந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி
தொடர் மழை காரணமாக வத்தல்மலை செல்லும் கொண்டை ஊசி வளைவில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தர்மபுரி:
தொடர் மழை காரணமாக வத்தல்மலை செல்லும் கொண்டை ஊசி வளைவில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
வத்தல்மலை
தர்மபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வத்தல்மலை கடல் மட்டத்தில் இருந்து 3700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் பெரியூர், ஒன்றிக்காடு, சின்னங்காடு, பால் சிலம்பு, நாயக்கனூர், மன்னாங்குழி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 24 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது.
தமிழக அரசு வத்தல்மலையை சுற்றுலா தலமாக அறிவித்து பூங்கா, படகு இல்லம், பார்வை கோபுரம் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வத்தல்மலைக்கு ரூ.10 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வத்தல்மலைக்கு செல்லும் மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மேலும் புதிதாக போடப்பட்ட தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மலைப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வத்தல்மலைக்கு நீண்டகாலமாக சாலை வசதி கேட்டு போராடி புதிய தார்சாலை கிடைத்தது. இந்த தார்சாலை தரமானதாக அமைக்காததால் தொடர் மழைக்கு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் சரிவை அகற்ற வேண்டும். கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என்று கூறினர்.