2வது நாளாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி
கன்சால்பேட்டை திடீர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வேலூர்
கன்சால்பேட்டை திடீர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
பலத்த மழை
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 11-ந் தேதி மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 7 மணி நேரம் கொட்டிய மழையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
வேலூர் மாநகராட்சியில் கன்சால்பேட்டை, இந்திராநகர், கொணவட்டம் திடீர்நகர், கோரிமேடு, சேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கியது. இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது முகாமுக்கு செல்ல மறுத்த மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்களும், வடக்கு போலீசாரும் இணைந்து மீட்டனர்.
தண்ணீர் வடியவில்லை
கன்சால்பேட்டை பகுதியில் 2-வது நாளாக மழைநீர் தேங்கி காணப்பட்டது. ஆனால் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. ஆனால் முழுமையாக வடியவில்லை. தெருக்களிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
வீடுகளில் தேங்கி காணப்பட்ட மழைநீரை வெளியேற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். சில வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமானது.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் மழைநீரில் சிரமத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
இதேபோல கொணவட்டம் திடீர்நகரில் தண்ணீரில் படகு மூலம் சிலர் பயணம் செய்தனர். மழைநீரை முழுமையாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.