கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்கள் இயங்கின: விவசாயிகள் பயிர் காப்பீடுக்கு விண்ணப்பம் மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேர் பதிவு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்காக கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்கள் இயங்கின. இதில் விவசாயிகள் பலர் விண்ணப்பித்தனர். மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
அறந்தாங்கி:
சம்பா நெல் சாகுபடி
வெள்ளம், புயலால் ஏற்படும் பயிர்சேதத்தில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக 2021-2022-ம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை உள்பட 26 மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடியில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15-11-2021 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள் பலர் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் தொடர் மழையில் விவசாயிகளின் நெற் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் தண்ணீரில் மூழ்கின. பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தன.
பயிர் காப்பீடுக்கு விண்ணப்பம்
இந்த நிலையில் கடைசி தேதி நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இதனால் விவசாயிகள் விண்ணப்பிக்க வசதியாக 13, 14-ந் தேதிகளில் கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்கள் இயங்கின. விவசாயிகள் பலர் பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். அறந்தாங்கி பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் நேற்று ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். கூத்தாடிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பலர் பயிர் காப்பீடுக்கு விண்ணப்பம் செய்தனர்.
தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கூட்டுறவு கடன் சங்கங்கள், இ-சேவை மையங்களும் இயங்கும். இன்றும் விவசாயிகள் பயிர் காப்பீடுக்கு விண்ணப்பித்து பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
70 ஆயிரம் பேர் பதிவு
மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு இதுவரை 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில், 70 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.