கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் தரிசனம்
கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
தூத்துக்குடி:
கோவில்களில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
சிவன் கோவில்
குரு பகவான் மகர ராசியில் இருந்து நேற்று கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து கோவில்களில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தூத்துக்குடி சிவன் கோவிலில் நேற்று குரு பகவானுக்கு லட்சார்ச்சனை, அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை வழிபட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள குரு பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் என பரிகார ராசிக்காரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். இதேபோல் மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.