‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-13 17:19 GMT
கால்வாயில் குவிந்த குப்பைகள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளம் கருடபகவான் மடையில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. மேலும் புதர்களும் மண்டி கிடக்கின்றன. இதனால் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் சரிவர செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி, அந்த கால்வாயில் குப்பைகள் மற்றும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- ஆறுமுகம், நாங்குநேரி. 

பஸ்கள் நின்று செல்லுமா?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் மேற்கு தெருவில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு விரிவடைந்து வருகிறது. இதனால் அந்த தெருவின் கடைசிப்பகுதியில் வாழும் பொதுமக்கள், பஸ் நிறுத்தத்துக்கு செல்ல நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. ஆகையால், வள்ளியூர் பணிமனையில் இருந்து வரும் பஸ்கள், மேற்கு தெருவில் நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம். 

நோய் பரவும் அபாயம் 

திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் தூர்வாரப்பட்டு சாலையில் போடப்பட்டு உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாய்க்கு மூடி போடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சாலையில் போடப்பட்டு உள்ள கழிவுகளை அகற்றுவதுடன் கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்கவும் அதிகாரிகள் கவனம் செலுத்த கேட்டுக் கொள்கிறேன். 
- சுயம்புபார்த்திபன், திசையன்விளை. 

தெருவிளக்கு வேண்டும் 

பாளையங்கோட்டை கே.டி.சி.நகருக்கு அருகில் உள்ள கீழநத்தம் கிராமத்துக்கு உட்பட்டது ஜெய்ன்ஸ் ரோஸ்மேரி நகர். இங்கு இன்னும் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடனேயே செல்ல வேண்டி உள்ளது. எனவே, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 
- ஆயிஷா ரபீக், ஜெய்ன்ஸ் ரோஸ்மேரிநகர்.

உயர்கோபுர மின்விளக்குகள் ஒளிருமா?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அச்சன்புதூரில் பேரூராட்சி அலுவலகம், திருவள்ளுவர் திடல், அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உயர்கோபுர விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் இருள் சூழ்ந்து காட்சி அளிப்பதால், பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். ஆகையால் அந்த உயர்கோபுர மின்விளக்குகள் பழுதை சரிசெய்து மீண்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- எம்.எஸ்.முகம்மது, அச்சன்புதூர். 

தெருவில் ஓடும் கழிவுநீர் 

சங்கரன்கோவில் அம்மா உணவகத்தில் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ேமலும் அந்த தெருவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக சாலை தோண்டப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சாலை சரிசெய்யப்படவில்லை. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் குழாய் உடைப்பை சரிசெய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
- பன்னீர், சங்கரன்கோவில். 

நிழற்கூடங்கள் தேவை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தெற்கு ரைஸ்மில் பஸ் நிறுத்தத்தில் இருந்த பழுதடைந்த நிழற்கூடம் சமீபத்தில் பெய்த மழையில் இடிந்து விழுந்து விட்டது. வடக்கு ஆலமர பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்ல வேண்டியது உள்ளது. எனவே, அந்த இரு இடங்களிலும் புதிதாக இருக்கை வசதியுடன் பயணிகள் நிழற்கூடம் அமைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 
- சேசுராஜ், சேதுக்குவாய்த்தான். 

சேறும், சகதியுமான சாலை 

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சித்தவநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரை தோட்டம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த கிராமத்தில் இருந்து மேட்டுப்பட்டி-விளாத்திகுளம் சாலை வரையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மண்சாலையாகவே உள்ளது. இதனால் மழை காலங்களில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. அதன் வழியாக தான் பள்ளி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, அந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- குருசாமி, அக்கரை தோட்டம். 

மேலும் செய்திகள்