எனதிரிமங்கலம் அணைக்கட்டின் கரையில் உடைப்பு

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் எனதிரிமங்கலம் அணைக்கட்டின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, 3 டன் கரும்புகளை தண்ணீர் அடித்துச்சென்றது.

Update: 2021-11-13 17:14 GMT
பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலத்திற்கும், விழுப்புரம் மாவட்டம் தளவானூருக்கும் இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை) சார்பில் ரூ.25 கோடியே 35 லட்சம் மதிப்பில் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எனதிரிமங்கலத்தில் உள்ள கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 3 மதகுகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
இதனிடையே தொடர் மழையாலும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 9-ந் தேதி காலை தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் சீறிப்பாய்ந்தது. 

வீணாகும் தண்ணீர் 

இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தளவானூர் அணைக்கட்டின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 3 மதகுகளும் உடைந்து சேதமடைந்தது. அணைக்கட்டு கட்டிய ஓராண்டிலேயே இருபுறமும் உள்ள மதகுகள் உடைந்து சேதமடைந்ததை பார்த்து விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்து மிகவும் கவலையடைந்தனர்.
சீரமைப்பு பணியில் முன்னேற்றம் இல்லை
ஏற்கனவே உடைந்து சேதமடைந்த மதகுகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளதால் பொதுப்பணித்துறையினர், அந்த அணைக்கட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதோடு அணைக்கட்டின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்க மணல்மேட்டின் மீது கருங்கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். இருப்பினும் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் இந்த தடுப்பு நடவடிக்கை பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கரையில் அரிப்பு 

இந்த நிலையில் நேற்று தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைக்கட்டின் இடதுபுறத்தில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் அருகே உள்ள கரையில் அரிப்பு ஏற்பட்டு, அவை உடைந்தது. அந்த கரைப்பகுதியை வெள்ளம் அடித்துச்சென்றது. 
அணைக்கட்டை தரமற்ற முறையில் கட்டியதாலும், அதன் இருபுற கரைகளையும் பலப்படுத்தி கான்கிரீட் சுவர் எழுப்பாததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
மேலும் அணைக்கட்டின் கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 3 டன் கரும்புகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. 
அதுமட்டுமின்றி அணைக்கட்டின் கரைப்பகுதி அருகில் இருந்த பனைமரங்களும் சாய்ந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனிடையே பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணைக்கட்டின் உடைந்த கரைப்பகுதியை பார்வையிட்டு தற்காலிக சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கை 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து தற்போது அதிகமாக உள்ளதால் கரைப்பகுதியில் இருந்து சுமார் 20 மீட்டர் அகலம், 50 மீட்டர் நீளத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டுக்கு வரும் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் மண் அரிப்பை தடுக்கும் தடுப்பு நடவடிக்கை பணி கைகொடுக்கவில்லை. தண்ணீர் வரத்து குறைந்ததும் மண் அரிப்பை தடுக்கும் தடுப்பு நடவடிக்கை பணி விரைந்து எடுக்கப்படும். அதற்காக 6 பொக்லைன் எந்திரங்கள், பெரிய, பெரிய கருங்கற்கள், மணல் மூட்டைகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்