சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு

ஆண்டிப்பட்டியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2021-11-13 16:39 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்த மகேந்திரன் மனைவி ரம்யாதேவி (வயது 68). இவர் அப்பகுதியில் உள்ள தனது மாட்டு கொட்டகைக்கு நேற்று மதியம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று மூதாட்டியை கீழே தள்ளிவிட்டனர். பின்னர் அவர்களில் ஒருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்தார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர். 
இதனால் நகையை பறிகொடுத்த மூதாட்டி அபயகுரல் எழுப்பினார். அப்போது அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கீழே விழுந்து கிடந்த ரம்யாதேவியை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். 
மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். 
அப்போது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் மர்மநபர்கள் நகைபறிப்பில் ஈடுபட்ட சம்பவ காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். 
பட்டப்பகலில் மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறித்த சம்பவம் ஆண்டிப்பட்டி நகர் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்