வேதாரண்யம் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல்

வேதாரண்யம் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-13 16:39 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ரூ.2½ கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரை கிராமத்தில் கியூ பிரிவு குற்ற புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன் உத்தரவின்பேரில் நாகை கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையில் போலீசார் வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ரூ.2½ கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர்
விசாரணையில் அவர்கள், வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த பாலகுரு(வயது 37), சத்தியானந்தம்(42) ஆகியோர் என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து ஒரு நபர் வருவதாகவும், தாங்கள் வைத்துள்ள பையை அவரிடம் கொடுப்பதற்காக நிற்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். 
அதில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 2.36 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் இருந்தது தெரிய வந்தது. இந்த திமிங்கலத்தின் உமிழ்நீர் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாசனைப் பொருட்கள், உயர் ரக மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
2 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுரு, சத்தியானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 2.36 கிலோ திமிங்கலத்தின் உமிழ்நீரை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்