முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வைகை அணைக்கு வந்தார். அப்போது 58-ம் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு, கால்வாயில் பாய்ந்தோடும் தண்ணீரில் மலர்தூவினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் 58-ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் அந்த திட்டம் முடிக்கப்பட்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்களும் நிரம்பும் வரை தண்ணீர் திறந்துவிட்டோம். தற்போதைய தி.மு.க. அரசு கண்துடைப்புக்காக தண்ணீரை திறக்காமல், கண்மாய்கள் முழுமையாக நிரம்பும் வகையில் தண்ணீர் வழங்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்களை திசைதிருப்பும் விதமாக அணையை பார்வையிட வந்ததையே சாதனையாக கருதி பேசி வருகிறார்.
முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு எப்படி அனுமதி அளித்தது?. முல்லைப்பெரியாறு அணை வரலாற்றில் நீர்மட்டம் 138 அடியாக இருக்கும்போது கேரள அரசு தண்ணீரை திறந்துவிட்ட சம்பவம் இதுவரை நடைபெற்றது உண்டா?. இதனை கண்டித்து தான் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உரிமையை நிலைநாட்ட தென்மாவட்ட விவசாயிகளுடன் எப்போதும் அ.தி.மு.க. துணை நிற்கும். இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எதுவும் பேசாமல் மவுனம் சாதிப்பது ஏன்?. முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீரை திறந்துவிட்ட சம்பவம் குறித்து நேரம் கிடைக்கும்போது முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.