வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர்.
ஆண்டிப்பட்டி:
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மதகுகளை திறந்து வைத்தனர்.
58-ம் கால்வாய்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பும் வகையில் வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தண்ணீர் திறப்பு
அதன்படி வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் மதகுகளை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள், உசிலம்பட்டி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
33 கண்மாய்கள்
தற்போது 58-ம் கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 1,912 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கரும் என மொத்தம் 2 ஆயிரத்து 285 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். 58-ம் கால்வாய் மூலம் மொத்தம் 300 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கால்வாய் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களை சென்றடையும். வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்பதால், அடுத்த 2 மாதங்களுக்கு வைகை அணை நீர்மட்டத்தை 69 அடியாக நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.