கோட்டூர் பகுதியில் மழைநீரில் மூழ்கி இருக்கும் சம்பா-தாளடி நெற்பயிர்கள் ஆறு- வடிகாலை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

கோட்டூர் பகுதியில் சம்பா-தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி இருக்கிறது. அந்த பகுதியில் ஆறு-வடிகாலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-11-13 15:37 GMT
கோட்டூர்:-

கோட்டூர் பகுதியில் சம்பா-தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி இருக்கிறது. அந்த பகுதியில் ஆறு-வடிகாலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெற்பயிர்களுக்கு பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப்பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந் தேதி திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. 
இதனால் ஏற்கனவே தண்ணீரால் சூழப்பட்டிருந்த வயல்களில் மேலும் தண்ணீர் சேர்ந்து நெற்பயிர்கள் மூழ்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களாக மழை இல்லாத நிலையில் விவசாயிகள் வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்றி பயிர்களை பராமரிக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

மழைநீர் வடியவில்லை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள புழுதிக்குடி, சோமாசி,  பல்லவராயன்கட்டளை, சோழங்கநல்லூர், ஆண்டி கோட்டகம், கீழ புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், தூத்திரிமூலை ஆகிய பகுதிகளில் 700 ஏக்கர் நிலத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெற்று இருந்தது. 
இந்த பகுதியில் மழை விட்டு 4 நாட்களாகியும் வயல்களில் இருந்து மழைநீர் வடியவில்லை. தண்ணீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை ஆண்டுதோறும் வடகிழக்குப்பருவமழை காலத்தில் ஏற்படுவதாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகிறார்கள். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வடிகாலில் முட்புதர்கள்

புழுதிக்குடியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மழைநீர் விக்கிரபாண்டியம் வடிகால் மற்றும் அடப்பாற்றில் தான் வடிய வேண்டும். ஆனால் விக்கிரபாண்டியம் வடிகாலை முழுவதுமாக தூர்வாராததால் காட்டாமணக்கு செடிகள், முட்புதர்கள் சூழ்ந்து வடிகால் தூர்ந்து கிடக்கிறது. விக்கிரபாண்டியத்தில் இருந்து பல்லவராயன் கட்டளை, கீழ புழுதிக்குடி வழியாக அடப்பாறு வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரவேண்டும். சோழங்கநல்லூர், சிதம்பர கோட்டகம், ஆண்டி கோட்டகம், அகரவயல் ஆகிய கிராமங்களின் வடிகாலை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு தூர்வாரி பிஞ்சூர் வடிகாலுடன் இணைக்க வேண்டும். அப்போது தான் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைவாக வடியும். 
இவ்வாறு விவசாயிகள் கூறினர். 

மேலும் செய்திகள்