பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி மலைக்கோவிலில் சாயரட்சை பூஜையில் காப்புக்கட்டு நடைபெற்றது. முன்னதாக மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர் என 16 வகை அபிஷேகம், ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சன்னதியில் உள்ள விநாயகர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், துவாரபாலகர்கள் மற்றும் மயில்வாகனம், கொடிமரத்துக்கு காப்புக்கட்டு நடந்தது. காப்புக்கட்டு நிகழ்ச்சியை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் குருக்கள் செய்தனர்.
அதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. மாலை 6.45 மணிக்கு தங்க சப்பரத்தில் உலா வருதல், சின்னக்குமாரர் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள்
கார்த்திகை தீபத்திருவிழா காப்புக்கட்டு நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. காப்புக்கட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் ‘அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். காப்புக்கட்டும் நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.