30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை
30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை
கோத்தகிரி
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் சிறுத்தை தவறி விழுந்தது. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த சிறுத்தை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கிளப் ரோடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். வனத்துறைக்கு சொந்தமான லாங்வுட் சோலையை ஒட்டி இப்பகுதி அமைந்துள்ளதால் கரடி, காட்டெருமை, சிறுத்தை, முள்ளம்பன்றி, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு இந்த குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள 30 அடி ஆழ கிணற்றில் சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது.
இதனால் அந்த சிறுத்தை வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா?
தகவலின் பேரில் கோத்தகிரி வனச்சரகர் சிவா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை பார்வையிட்டனர். பின்னர் சிறுத்தை தண்ணீரில் மூழ்காமல் இருக்க மூங்கில் கூடையை கயிறு மூலம் கிணற்றில் இறக்கினார்கள். அந்த கூடைக்குள் சிறுத்தை ஏறி படுத்துக்கொண்டது. இதையடுத்து கூடையை சற்று உயர்த்தி தூக்கி கயிறில் கட்டப்பட்டது.
மேலும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா? அல்லது வலை மூலம் மீட்டு, கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதா? என முடிவு செய்வதற்காக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மீட்பதில் சிக்கல்
சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி பரவியதையடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். எனவே கிணற்றின் அருகே பொதுமக்கள் செல்லாத வகையில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் முதுமலை வனவிலங்குகள் சரணாலய கால்நடை மருத்துவர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் நீரஜ் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தை பார்வையிட்டார். பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதை தவிர்த்து, வலை மூலம் கிணற்றை முழுவதுமாக மூடி, கூடையுடன் சிறுத்தையை வெளியே கொண்டு வந்து கூண்டிற்குள் அடைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிணற்றை பிளாஸ்டிக் கயிறாலான வலை போட்டு மூடப்பட்ட பிறகு கிணற்றுக்கு அருகாமையில் கூண்டு வைக்கப்பட்டது. இதையடுத்து சிறுத்தை அமர்ந்துள்ள மூங்கில் கூடையை வெளியே தூக்கும் போது, மூங்கில் கூடை நழுவி மீண்டும் கிணற்றுக்குள் சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
வனப்பகுதியில் விடப்பட்டது
பலமுறை மேற்கொண்ட முயற்சியையடுத்து 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வெளியே வந்த சிறுத்தையை வனத்துறையினர் லாவகமாக கூண்டிற்குள் அடைத்தனர். கூண்டில் சிக்கிய சிறுத்தையை சரக்கு வாகனத்தில் ஏற்றி அப்பர்பவானி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.