பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும் நெகமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வினோத்குமார் பரிசோதனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் சிறுமி என்பதால் இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியை வினோத்குமார் காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போலீசார் வினோத்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையத்தில் அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
----