வரதராஜபுரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வரதராஜபுரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-13 07:12 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்த பகுதி முழுவதும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வரதராஜபுரம், ஆதனூர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் வடகிழக்கு பருவமழை பெய்யும் போதெல்லாம் வரதராஜபுரம் பகுதி முழுவதும் மழை வெள்ளம் தேங்கி வடியாமல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

இதனால் இந்த பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். தற்போது பெய்த மழையால் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பி.டி.சி. நகர், பரத்வாஜ் நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், கிருஷ்ணா நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் 3 அடிக்கு மேல் வெள்ளம் வடியாமல் சூழ்ந்துள்ளது. பாம்பு, ஆமை, விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வந்து செல்கிறது. குடியிருப்பு பகுதியில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தை அடையாறு கால்வாயில் கொண்டு இணைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் எனவும் தெரிவித்தனர். மேலும் கடந்த 7 ஆண்டுகளாக மழைக்காலம் வந்தால் வரதராஜபுரம் பகுதியில் இதே நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா? மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும் போது அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வெள்ளத்தை வெளியேற்றி வருவதும் வாடிக்கையாகி விட்டது. தற்போதும் வெள்ளத்தை வெளியேற்றி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்