தர்மபுரி அருகே அதிகாலையில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது 2 348 பயணிகள் உயிர் தப்பினர்
தர்மபுரி அருகே அதிகாலையில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2 348 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி அருகே அதிகாலையில் தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 2,348 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தடம்புரண்ட ரெயில்
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பக்கமுள்ள வே.முத்தம்பட்டி அருகே மலைப்பாதையில் சேலம்-தர்மபுரி இடையேயான ரெயில் தண்டவாளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக இந்த பகுதியில் ரெயில் பாதை அருகில் இருந்த பாறைகள் இளகி இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு அந்த பகுதி வழியாக யஷ்வந்த்்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தர்மபுரி நோக்கி வந்தது.
அப்போது மலைப்பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது திடீரென என்ஜினுக்கு பின்னால் இருந்த சில பெட்டிகள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் 7 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரெயிலில் இருந்த 2,348 பயணிகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதிகாரிகள் விரைந்தனர்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பெங்களூரு ரெயில்வே கோட்ட மேலாளர் சியாம் சிங் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விபத்து நிவாரண சிறப்பு ரெயில் மூலமாக பெங்களூருவில் இருந்து வே.முத்தம்பட்டி பகுதிக்கு வந்தனர்.
இதுபோல் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈரோட்டில் இருந்து மற்றொரு விபத்து நிவாரண சிறப்பு ரெயில் மூலமாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாலையில் நடந்த விபத்து காரணமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் பயணிகள் ரெயிலில் காத்திருந்தனர்.
இந்த ரெயிலில் வந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டு தொப்பூரில் இருந்து 15 பஸ்கள் மூலமாக பெங்களூரு மற்றும் அவர்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ரெயிலில் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 7 பெட்டிகள் சிறப்பு ரெயிலுடன் இணைக்கப்பட்டு சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முன் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் மற்றொரு சிறப்பு ரெயிலுடன் இணைக்கப்பட்டு தர்மபுரிக்கு கொண்டு வரப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதைத்தொடர்ந்து தென்மேற்கு ரெயில்வே பொதுமேலாளர் சஞ்சீவ் கிஷோர், கூடுதல் பொதுமேலாளர் பி.கே.மிஸ்ரா, தலைமை பொறியாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை குழு தலைவர் எஸ்.பி.எஸ். குப்தா ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பெங்களூரு- எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் ரெயில், நாகர்கோவில்- பெங்களூரு விழாக்கால சிறப்பு ரெயில் ஆகியவற்றை திருப்பத்தூர் வழியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரெயில் பயணிகளுக்கு உதவ தர்மபுரி, பெங்களூரு, ஓசூர் ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி ஆகியோர் ரெயில் தடம் புரண்ட இடத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி நிருபர்களிடம் கூறியதாவது:-
சீரமைப்பு பணி
தர்மபுரி வே.முத்தம்பட்டி அருகே பாறாங்கற்கள் சரிந்து ரெயில் தடம்புரண்ட சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவர்களை பாதுகாப்பாக மீட்டு பஸ்கள் மூலம் பெங்களூரு மற்றும் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றி சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் ரெயில்களை மாற்று பாதையில் ஜோலார்பேட்டை வழியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.