வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் தவிப்புக்குள்ளானவர்கள் படகு மூலம் மீட்பு
வேலூர் கன்சால்பேட்டை, திடீர்நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கிய பொதுமக்களை படகு மூலம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்டனர்.
வேலூர்
வேலூர் கன்சால்பேட்டை, திடீர்நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கிய பொதுமக்களை படகு மூலம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்டனர்.
வீடுகளில் தவிப்பு
வேலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அதன்படி வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சம்பத்நகர், முள்ளிப்பாளையம், திடீர்நகர், இந்திராநகர், கன்சால்பேட்டை போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் தவித்தனர்.
கன்சால்பேட்டை, இந்திராநகர் பகுதி முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு 7 மணி அளவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சிறிது நேரத்தில் தண்ணீர் மட்டம் உயர தொடங்கியது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் பொதுமக்களை மீட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். அப்போது கன்சால்பேட்டை பகுதியில் சிலர் முகாமுக்கு செல்ல மறுத்தனர்.
படகு மூலம் மீட்பு
இந்திராநகர் பகுதியில் தவித்த மக்களை டிரைசைக்கிளை பயன்படுத்தி பொதுமக்களை போலீசார் மீட்டனர். இந்தநிலையில் நேற்று காலை கன்சால்பேட்டை பகுதியில் தண்ணீர் வடியாமல் ஒருசில இடங்களில் மார்பளவு தண்ணீரும், சில இடங்களில் இடுப்பளவு தண்ணீரும் தேங்கி காணப்பட்டது. முகாமுக்கு செல்ல மறுத்தவர்கள் அங்கு சிக்கிக்கொண்டனர்.
மழைநீர் வடியாமல் இருந்ததால் அவர்களை மீட்கும்பொருட்டு வடக்கு போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் படகு மூலம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து கர்ப்பிணி பெண் உள்பட 11 பேரை மீட்டனர்.
கர்ப்பிணிக்கு பிரசவவலி
இதேபோல கொணவட்டம் திடீர்நகர் நகர் முழுவதும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் வீடுகளில் தவித்தனர். அங்கு நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் சிக்கிக்கொண்டார். பைபர் படகுகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை வருவாய்த்துறையினர் மீட்கதொடங்கினர். அப்போது கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. அவரையும் உடனடியாக படகு மூலம் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். இந்த மீட்பு பணி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலையில் நடந்தது.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா பெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பி கோடி போனது. ஏரியில் இருந்து வெளிேயறிய நீர் குடியிருப்புப் பகுதியில் புகுந்தது. மேலும் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இடுப்பு அளவு தண்ணீரும், கீழாச்சூர், ரங்கநாதன் நகர் திருவள்ளுவர் நகர், பொன்னியம்மன் நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் போலீசாருடன் சென்று பொக்லைன் என்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளத்தை கட்டுப்படுத்தினர்.
அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு மற்றும் அதிகாரிகள் பள்ளிகொண்டாவில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தனர். பலவீனமாக உள்ள ஏரிக்கரை பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கிவைக்குமாறு நந்தகுமார் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தினார்.
அணைக்கட்டுப் பகுதியில் உள்ள அல்லேரி மலையில் இருந்து உருவாகி வரதலம்பட்டு வழியாக செல்லும் பேயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேய் ஆற்றையொட்டி பள்ளிகொண்டாவில் இருந்து வெட்டுவானம் மற்றும் பிராண மங்கலம் வழியாக ஒதியத்தூர் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வேலூர் செல்வதற்கு சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சென்று அணைக்கட்டு வழியாக வேலூருக்கு சென்று வருகின்றனர்.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒதியத்தூர் ஊராட்சியில் தொடர் மழை காரணமாக நேற்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து உள்ளது. அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடியாத்தம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு, என்.எஸ்.கே.நகர், காமராஜர் பாலம், சுண்ணாம்பு பேட்டை ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இங்கு வசித்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வசதி செய்யப்பட்டன.
பாவோடும் தோப்பு மற்றும் என்.எஸ்.கே. நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் பைர்வையிட்டு பொது மக்களை உடனடியாக முகாம்களில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினர்.
தாசில்தார் லலிதா, குடியாத்தம் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.சவுந்தரராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.