அங்கேரிபாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பு பகுதிகளில் தனித்தீவானது.

அங்கேரிபாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பு பகுதிகளில் தனித்தீவானது

Update: 2021-11-13 04:48 GMT
அனுப்பர்பாளையம், 
அங்கேரிபாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பு பகுதிகளில் தனித்தீவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். 
தனித்தீவான குடியிருப்பு 
திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையம் பாலு இன்னோவேஷன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்தப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நல்லாற்றில் சென்று கலக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் வடிகால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பின் அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதற்காக பாலு இன்னோவேஷன் பகுதியிலுள்ள வடிகாலை நீட்டித்து மாநகராட்சி நிர்வாகம் வடிகால் கட்டியது. ஆனால் புதிதாக கட்டப்பட்ட வடிகால் உயர்வாக இருந்ததால் பாலு இன்னோவேஷன் பகுதியிலிருந்து கழிவுநீர் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி தனி தீவு போல் காட்சி அளிக்கிறது. 
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
தண்ணீரை வெளியேற்ற வேண்டும்
 தொடக்கத்தில் கட்டப்பட்ட வடிகால் மூலமாக எங்கள் பகுதியில் இருந்து கழிவுநீர் எளிதாக வெளியேறியது. ஆனால் அந்த வடிகாலை நீட்டித்து புதிதாக கட்டப்பட்ட வடிகால் முறையாக கட்டப்படாததால் எங்கள் பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் எங்கள் குடியிருப்பு பகுதி குளத்தில் மூழ்கியது போல் காணப்படுகிறது. 
தற்போது கடந்த ஒரு வாரமாக இங்கு மழைநீரும் கழிவுநீரும் சேர்ந்து அதிக அளவில் தேங்கி இருப்பதால் இங்குள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் வெளியே செல்ல முடியவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் இங்கு தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் முறையாக கட்டப்படாத வடிகாலை சீரமைத்து முறையாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்