பெங்களூருவில் இருந்து கோவைக்கு வேனில் கடத்த முயன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் டிரைவர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு வேனில் கடத்த முயன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சூளகிரி:
சூளகிரி போலீசார் காமன்தொட்டி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், வெங்காய மூட்டைகளுக்கு அடியில் புகையிலை பொருட்கள், கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால் நகரை சேர்ந்த மஞ்சுநாத் (வயது31) என்பதும், பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் இருந்து கோவைக்கு அந்த புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 254 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டன.