ஓசூரில் இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ 85 ஆயிரம் அபேஸ் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஓசூரில் இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ 85 ஆயிரம் அபேஸ் செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2021-11-13 04:48 GMT
கிருஷ்ணகிரி:
ஓசூரில் இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ 85 ஆயிரம் அபேஸ் செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் அம்மன் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மகள் சாஸ்திபிரியா (வயது 24). இவர் வேலை தேடி வந்தார். கடந்த மாதம் 27-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் பகுதி நேர வேலை. நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையில் சம்பாதிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ள லிங்க் மூலம் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த குறுந்தகவலை பார்த்த சாஸ்திபிரியா, அந்த லிங்க்கை தொடர்பு கொண்ட போது நீங்கள் முதலில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் வேலை உறுதி செய்யப்படும். மேலும் பணமும் இரட்டிப்பாக திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பணம் அபேஸ் 
இதை நம்பி சாஸ்திபிரியா ரூ.85 ஆயிரத்து 700-ஐ அதில் குறிப்பிட்டிருந்த கணக்கில் செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை இரட்டிப்பாக திரும்ப தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டு பணம் அபேஸ் செய்ததை உணர்ந்த சாஸ்திபிரியா இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இளம்பெண்ணிடம் நூதனமுறையில் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்