பிட்காயின் முறைகேடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்

பிட்காயின் முறைகேடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Update: 2021-11-12 21:32 GMT
பெங்களூரு:

 பிட்காயின் முறைகேடு விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மூடிமறைக்க முயற்சி

  பிட்காயின் விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி ஹேக்கர் ஸ்ரீகி கைது செய்யப்பட்டார். வழக்கு குறித்து 3 நாட்கள் எதையும் போலீசார் வெளியே கூறவில்லை. 17-ந் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவரை 14 நாட்கள் போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரித்தனர்.

  அதன் பிறகு மீண்டும் ஒரு முறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மேலும் ஒரு வழக்கை அவர் மீது பதிவு செய்தனர். பிட்காயின் விவகாரத்தில் உண்மையை மூடிமறைக்க அரசு முயற்சி செய்கிறது. வாக்குமூலத்தில் ‘‘கிரிப்டோகரன்சி’’ பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறையில் தள்ளுங்கள்

  ஸ்ரீகி ஒரு சர்வதேச ஹேக்கர். அவருக்கு போலீசார் போதைப்பொருள் கொடுப்பதாக அவரது தந்தை குற்றம்சாட்டினார். கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி ஸ்ரீகியை கைது செய்தது குறித்தும், பிட்காயின் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் போலீசார் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்தனர். 31 பிட்காயின் பறிமுதல் செய்யப்பட்டன.

  காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் தள்ளுங்கள். நான் ஆவணங்கள் முழுமையாக பார்த்தேன். இதுகுறித்து முழுவிவரங்களை சேகரித்து வருகிறோம்.

மூடிமறைக்க வேண்டும்

  தேவைப்பட்டால் நாங்கள் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்வோம். இதை நாங்கள் இறுதி வரை கொண்டு செல்வோம். இவர்கள் முறைகேட்டை விசாரிக்கிறார்களா? அல்லது தவறு செய்தவர்களை காப்பாற்றுகிறார்களா?. போலீஸ் காவலில் இருந்தவர் போதைப்பொருளை பயன்படுத்தியது எப்படி?. பிட்காயின் முறைகேட்டில் ஹேக்கர் ஸ்ரீகியை இந்த அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது.

  மேலும் இந்த வழக்கை மூடிமறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு விசாரணை நடத்துகிறது. இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. அதனால் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும்.

கனவு டிஜிட்டல் இந்தியா

  தற்போது பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடியின் கனவு டிஜிட்டல் இந்தியா இது அல்ல. பிட்காயின் விவகாரத்தில் ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது இது இந்தியாவிலேயே முதல் முறை. கர்நாடகத்தில் 3-வது முதல்-மந்திரி வருவது பா.ஜனதா மேலிட விவகாரம். பிட்காயின் விவகாரம் குறித்து மக்களுக்கு முழுமையான தகவலை தெரியப்படுத்த வேண்டும்.
  இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

மேலும் செய்திகள்