நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கம்
சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டன. பூதப்பாண்டி வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நெல்லைக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டன. பூதப்பாண்டி வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.
போக்குவரத்து துண்டிப்பு
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஆறுகள், கால்வாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இந்த மழையின் காரணமாக நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம், நாவல்காடு ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் உடைந்ததாலும், மழை வெள்ளம் பெருக்கெடுத்ததாலும் இறச்சகுளம், பூதப்பாண்டி, ஈசாந்தி மங்கலம், தெரிசனங்கோப்பு, கடுக்கரை, காட்டுப்புதூர், அருமநல்லூர், தாழக்குடி உள்ளிட்ட பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் ஓடியதால் நேற்று காலையில் இருந்து நாகர்கோவில்- பூதப்பாண்டி வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சாலையில் ஓடிய மழை வெள்ளம்
இதனால் பூதப்பாண்டி, அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், தெள்ளாந்தி, அழகியபாண்டியபுரம், கீரிப்பாறை, தாழக்குடி, பூதப்பாண்டி வழித்தடத்தில் இயக்கப்படக்கூடிய குலசேகரம், அருமனை போன்ற பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து நேற்று நாள் முழுவதும் நிறுத்தப்பட்டது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டன.
இதோபோல் மழையின் காரணமாக நேற்று காலையில் இருந்து பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் இந்த தண்ணீரின் வரத்து அதிகரித்ததின் காரணமாக ஒழுகினசேரி பகுதியில் உள்ள சாலையில் புகுந்து ஓடியது. இதனால் சாலையில் இடுப்பளவு தண்ணீர் சென்றது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மாற்றுப்பாதையில் இயக்கம்
இதனால் நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் அருகிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்கள் ஒழுகினசேரி பாலம் அருகிலும் நிறுத்தப்பட்டன. இதனால் ஏராளமான வாகனங்கள் அங்குமிங்கும் செல்லமுடியாதபடி நின்றன. இதையடுத்து நெல்லைக்கும், நெல்லை மார்க்கமாக செல்லக்கூடிய அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் இருந்து மயிலாடி, அஞ்சுகிராமம், காவல்கிணறு வழித்தடத்தில் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக நாகர்கோவில் கேப்ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே சாலைகள் குண்டும், குழியுமாக கிடந்ததாலும், அதிக அளவு வாகன போக்குவரத்து இருந்ததாலும் கோட்டார் சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் பஸ்களில் சென்ற பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள்.