சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் மறியல்

ஒரத்தநாடு அருகே மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-12 20:22 GMT
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 நெல் கொள்முதல் நிலையம்
 ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்  செயல்பட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பெருமளவு கொண்டு வந்து வைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கக்கரைக்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. இதனால் நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். மேலும் இதேபகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெல் அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நேற்று மன்னார்குடி -திருவோணம் சாலையில் கக்கரைக்கோட்டை பாலம் அருகே சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாக திறந்து, நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல்  காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்