மர்ம நபர்கள் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் சாவு
மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்;
அரிமளம்
அறந்தாங்கி தாலுகா எல்.என்.புரத்தைச் சேர்ந்த ஸ்ரீதரின் மகன் பாலநிகேதன் (வயது 20). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 6-ம் தேதி காரைக்குடிக்கு பழங்கள் ஏற்றிவர சவாரி சென்றார். கீழாநிலைக்கோட்டை அருகே மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த பாலநிகேதன் மயக்கமடைந்தார். இதனால் பயந்து போன மர்ம நபர்கள், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடி அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றபோது நடந்த சம்பவத்தை பாலநிகேதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து பலத்த காயங்களுடன் இருந்த பாலநிகேதனை அறந்தாங்கி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலநிகேதன் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், பாலநிகேதனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.