இறந்தவரின் உடலை மயானத்திற்கு ஏரியில் தூக்கிச்செல்லும் அவலம்
இறந்தவரின் உடலை மயானத்திற்கு ஏரியில் தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது.
ஜெயங்கொண்டம்:
கழுத்தளவு நீரில்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மழை நீரானது வடிகால் ஓடை வழியாகவும், காட்டு பகுதிகளின் வழியாகவும் வந்து கலக்கிறது. இதனால் மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி, அங்குள்ள வடிகால் மதகு வழியாக தண்ணீர் வழிந்து சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது.
இந்த ஏரியின் கரையில் மயானம் உள்ளது. இறந்தவரின் உடலை ஏரியின் கரை வழியாக மயானத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால் மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்பி கரை வரை தண்ணீர் உள்ள நிலையில், இறந்தவர்களின் உடலை சுமந்து கொண்டு ஏரியின் வழியாக கழுத்தளவு நீரில் மயானத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
பாலம் அமைக்கவில்லை
கடந்த 2004-ம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடிக்கிறது. 2019-ம் ஆண்டில் இறந்த சிவலிங்கத்தின் மனைவி ருக்மணி, சாரங்கபாணி மனைவி கோசலம், 2020-ம் ஆண்டு இறந்த கோக்கர் என்ற ராமலிங்கம் ஆகியோரின் உடல் களை மார்பளவு தண்ணீரில் மயானத்திற்கு சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து, உடனடியாக அப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தரப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
போராட்டம் நடத்துவோம்
தற்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏரி முழு கொள்ளளவை எட்டி வடிகால் ஓடையில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கழுவந்தோண்டி கிராமத்தில் வடக்குத்தெருவை சேர்ந்த கண்ணன்(வயது 50) நேற்றும், பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மற்றொரு கண்ணன்(45) நேற்று முன்தினமும் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அவர்களின் உடலை மயானத்திற்கு வழக்கம்போல் இடுப்பளவு மற்றும் கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்ற நிலை கழுவந்தோண்டி மக்களுக்கு உள்ளது. ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்து, சரி செய்து தருவதாக கூறி செல்கின்றனர். தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஊர்மக்கள் அனைவரும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம், என்றனர்.
விரைவில் நடவடிக்கை
இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பொதுமக்களிடம் கூறிச்சென்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) குருநாதனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், அந்த பகுதியில் பாலம் கட்டுவதற்கு ஒன்றிய அலுவலகத்தில் மதிப்பீடு தயார் செய்து, மாவட்ட கலெக்டருக்கு கருத்துரு அனுப்பி வைத்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.