பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்;
சேலம், நவ.13-
சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களை பள்ளிகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
நேரில் ஆய்வு
சேலம் வீராணம் அருகே தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலசபரி என்கிற 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் மேலும் சில வீடுகள் தொடர் மழையால் சேதமடைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆறுதல்
இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டீன் வள்ளிசத்தியமூர்த்தியிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.