மத்திய அரசு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

மத்திய அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

Update: 2021-11-12 19:14 GMT
விருதுநகர், 
மத்திய அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். 
பாராட்டு 
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:- 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மக்கள் பிரதிநிதிகள் கூறும் கருத்துகளை ஏற்று அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன். சற்றுமுன் நடந்த கண்காணிப்புக்குழுக்கூட்டத்தில் ஜல்சக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சரிவர பணிகள் நடக்கவில்லை என கூறப்பட்டதால் அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். 
ஆனைக்குட்டம் அணையை பொருத்தமட்டில் அதன் ஷட்டர்களை பழுதுபார்க்க ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பெரும் தொழில்நிறுவனங்களுக்கு துணை போகிறதே தவிர கிராமப்பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டப்பணியையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏற்புடையது அல்ல.
 இதுகுறித்து முதல்-அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். எனவே மத்திய அரசு உடனடியாக 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
நடை பயணம் 
மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தது போல டீசல் பெட்ரோலுக்கான வரி விதிப்பை ரூ.9ஆக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. அதை முதலில் மத்திய அரசு செய்ய வேண்டும். 
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் முடிவுகள் பாடம் கற்பித்ததை தொடர்ந்து மத்திய அரசு மீண்டும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்து உள்ளது. ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளாக இதே அளவிற்கு தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இது போதுமானதல்ல. எனவே இனி குறைந்தபட்சம் ரூ. 10 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி ஒவ்வொரு எம்.பி.க்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வருகிற 14-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நாடு முழுவதும் நடைபயணம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் வெள்ளப்பணிகளை தமிழக அரசு சிறப்பாகசெய்துள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக கண்காணிப்பு குழு கூட்டம் மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.பி.க்கள் தனுஷ் குமார், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. ஆர். ஆர். சீனிவாசன், அசோகன், ரகுராமன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கல ராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ், திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்